Thursday, October 30, 2014

சராசர குரு என்றும், சர்வஸ்வரூபி என்றும் விஷ்ணுவுடைய அவதாரம் தர்மத்தைக் காப்பாற்றவும், சாதுக்களை அவர்களுடைய கர்மத்தளைகளிலிருந்து நீக்கி மோட்சம் அளிக்கவும் ஏற்படும்.சம்பளக் கிராமத்தில் முக்கியமானவரும், மகாத்மாவுமாகிய கல்கி என்ற பெயருடன் பகவான் அவதரிப்பார். அணிமாதி அஷ்டமா சித்தியுடன், சத்திய சங்கல்பம் முதலிய குணங்களுடன் லோகநாயகன், வேகமாகச் செல்லும் குதிரை மீது ஏறிக்கொண்டு கத்தியால் தீயோரை அடக்குவார் ஒப்பற்ற வேகம் கொண்ட குதிரை மீது ஏறி விரைவில் உலகெங்கிலும் சஞ்சாரம் செய்து, அரச வேடம் தாங்கி மறைவில் வாழும் திருடர்களை கோடிக்கணக்கில் சம்ஹாரம் செய்வார். துஷ்டர்கள் அழிவர்.அதன் பின்பு புண்ணிய வாசனை கலந்த காற்றினால் தீண்டப் பெறும் நாடு நகர மக்கள் உள்ளம் தெளிவு பெறும். அவர்களது உள்ளத்தில் சத்துவகுண சீலரான பகவான் வாசம் செய்வார். அவர்களுடைய சந்ததி நல்ல வகையில் நல்லவர்களாக பன்மடங்கு பெருகும். தர்மத்திற்கு உறைவிடமான பகவான் விஷ்ணு கல்கி அவதாரம் எடுக்கும் பொழுது இந்த உலகம் பழைய கிருதயுகம் எப்படி இருந்ததோ அதன்படி மாறும். மக்களின் பிறப்பும், சாத்வீகமாகத் திகழும்.சூரியன், சந்திரன், குரு ஆகிய மூவரும் பூச நட்சத்திரத்தில் ஒரே ராசியில் எப்பொழுது கூடுகிறார்களோ அதுவே மறுபடித் தோன்றக்கூடிய கிருதயுகம் எனப்படும். ஸ்ரீ ஹரியின் தசாவதாரக் கதைகளை ஏகாதசி, துவாதசி காலங்களில் படித்தாலோ, கேட்டாலோ நமக்கு அளவில்லாத மகிழ்ச்சியும், மங்கலமும் உண்டாகும் என ஸ்ரீமத் பாகவதம் கூறுகிறது.

No comments:

Post a Comment