Wednesday, November 12, 2014

ஒரு தத்துவ தரிசனம் - ஸ்ரீ மத் பாகவத கதைகள்


கதைகளை பார்ப்பதும், படிப்பதும், கேட்பதும் மற்றும் சொல்லுவதும் நமது முன்னோர் நமக்கு கற்று தந்த பாடங்களில் மிகவும் அனுபவ பூர்வமானவைகள். அறிவுரைகளையோ அல்லது சிறந்த செய்திகளையோ வெறுமனே மற்றவர்களுக்கு சொல்லும் போது அவை வெகுவாக ஈர்ப்பதில்லை. அதையே கதாபாத்திரங்களுடன் கூடிய ஒரு கதையாக்கி, சொல்லும் பொழுது மனதில் வெகு விரைவில் பதிகிறது. சிறுவயதினருக்கு, ஒழுக்கத்தை கற்று கொடுக்கும் ஒரு நுட்பமான கருவிகளாக இந்த கதைகள் இருந்து வருகின்றன. பண்டைய காலம் தொட்டே, கடினமான அல்லது முக்கியமான ஒரு விஷயத்தை எளிதாக மற்றவர்களுக்கு கதைகள் மூலம் விளக்கும் கலையை நம் முன்னோர்கள் நன்கு கற்று அறிந்திருக்கிறார்கள். புராணம், இதிகாசம் போன்றவைகள் இதற்கு நல்ல உதாரணங்கள். கதைகள், குழந்தைகளை தூங்க வைப்பதோடு  நில்லாமல், தூங்கி கொண்டு இருக்கும் சில நல்ல உணர்வுகளையும் தட்டி எழுப்பும் பொறுப்பையும் கொண்ட கலைகள் என்றே சொல்லலாம்.

உலகில் உள்ள எல்லா மதங்களும், "கதைகள்" என்னும் கலையையே கையில் எடுத்து அவற்றை பரப்பி வந்துள்ளன. பல முனிவர்கள், நமக்கு கற்று கொடுக்க விரும்பிய வாழ்க்கை பாடங்களை கதைகளாக்கி  அதன் மூலம் தான் கூற விரும்பும் கொள்கைகளையும், நெறி முறைகளையும் கூறி வந்துள்ளனர். இதில் இந்து மதத்தில், "வியாசர்" என்னும் முனிவர் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறார். "மஹா பாரதம்" என்ற இதிகாசத்தையும், 18 புராணங்களையும் நமக்கு அளித்ததோடு அல்லாமல், வேதங்களையும் செவ்வனாக 4 பிரிவுகளாக பிரித்து வழங்கிய பெருமையும் உடையவர். அவர் எழுதிய மற்றும் புராணங்களிலேயே மிகவும் சிறப்பு வாய்ந்த புராணமாகவும்  கருதப்படும் "ஸ்ரீ மத் பாகவதம்" என்னும் புராணத்தில் வரும் "புரஞ்சரனோ பாக்யானம்" மற்றும் "கஜேந்திர மோக்ஷம்" என்னும் கதைகளை நான் ஒரு ஒலி நாடாவில் சமீப கால கட்டத்தில் கேட்டு அறிந்தேன். அந்த கதைகள் நமக்கு ஏற்கனவே பரிச்சயம் ஆன கதைகளாக இருப்பினும், ஒரு புதிய கோணத்தில் அந்த கதைகள் அலசப்பட்டு இருப்பதை நான் உணர்ந்தேன். அதை இந்த பதிவு மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்.



1) புரஞ்சரனோ பாக்யானம்

புரஞ்சரனோ பாக்யானம் என்ற இந்த கதையை ஒரு சிலர் மட்டுமே அறிந்து இருக்கக்கூடும் என கருதுகிறேன். இந்த கதையை "நாரத மகரிஷி" விளக்கம் அளிக்கும் கதையாக வியாசர் சித்தரித்து உள்ளார். இனி கதையை பார்ப்போம் (இல்லை படிப்போம்).

முன்பொரு காலத்தில் "புரஞ்சரன்" மற்றும் "அவிக்ஞானன்" என்ற இரு பேர்கள், இணைபிரியாத நண்பர்களாக இருந்து வந்தனர். புரஞ்சரனை காட்டிலும், அவிக்ஞானன் சிறந்த ஞானத்தை உடையவனாக இருந்தான். அவர்கள் இருவரும் எந்த விதமான கவலையும் இன்றி ஆனந்தமாக வாழ்ந்து கொண்டு வந்தனர். ஒரு நாள், அவர்களுடைய பயணத்தின் இடையில் ஒரு அழகான ஊரை பார்த்தனர். "9" வாசல் கோட்டைகளை கொண்டு, அந்த ஊர் கம்பீரமாக காட்சி அளித்தது. அங்கே, மிகவும் அழகான ஒரு பெண், 5 தலை நாகத்தை குடையாக கொண்டு, அம்சமாக நடந்து வரும் காட்சியை கண்டனர். அந்த நகருக்கு ராணியான அவளின் அழகில் "புரஞ்சரன்" மயங்கி போனான். அவளை கல்யாணம் செய்து கொண்டு அந்த நகரத்திற்கு ராஜாவாகி, அங்கேயே தங்கி விடுவது என்று முடிவு செய்தான். புரஞ்சரனை கண்ட அந்த ராணியும், அவன் அழகில் மயங்கி போனாள். இருவரும் ஒருவருக்கு ஒருவர் பேசி, முழு மன திருப்தியுடன் வாழ்க்கையில் இணைய முடிவு செய்தனர். இதனை சற்றும் எதிர்பாராத நண்பன் "அவிக்ஞானன்", இதனை கண்டு மிகவும் ஆச்சர்யம் அடைந்தான். தன் நண்பன் புரஞ்சரனிடம், "நன்றாக யோசித்து கொள் நண்பா, இது உண்மையிலேயே உனக்கு தேவை தானா?" என்று கேட்டான். ஆனால் புரஞ்சரனின் அளவு கடந்த ஆசையை கண்டு, நண்பன் அவிக்ஞானன், அவனுக்கு அந்த ராணியை மனம் செய்து வைத்து விட்டு, தனியாக புறப்பட தயார் ஆனான். இப்படி புரஞ்சரனுக்கும், அந்த அழகு மங்கைக்கும் திருமணம் நடந்தது.

அவர்கள் நீண்ட காலம் வெகு சந்தோசமாக வாழ்ந்து வந்தனர். அந்த ராணி, எதை சொன்னாலும் மறுக்காமல் அதை புரஞ்சரன் செய்து வந்தான். இடையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் மனைவியிடம் சொல்லாமல் வேட்டைக்கு சென்று வந்தான். அதை கேள்வி பட்ட ராணி, தலைவிரி கோலமாய் கூச்சலிட ஆரம்பித்தாள். "தன்னிடம் கேட்காமல் வேட்டைக்கு மட்டும் அல்ல, இனி எதையும் செய்ய கூடாது" என அழுது ஆர்ப்பாட்டம் இட்டாள். திகைத்து நின்ற புரஞ்சரன், "இனி உன்னை கேட்காது எதையும் செய்ய மாட்டேன்" என கூறி சமாதான படுத்தினான். அதே போல, தன் மனைவி சொல் படி மட்டுமே வாழ்ந்து வந்தான். நாட்கள் ஓடின. செழிப்பான அந்த அழகிய நகரத்தை,  எதிரிகள் நோட்டம் இட ஆரம்பித்தனர். எப்படியும் அந்த நகரத்தை தன் வசப்படுத்த அவர்கள் நினைத்தனர்.

எதிரி நாட்டு மன்னன், அந்த அழகிய நகரத்தை எப்படி தன் வசப்படுத்துவது என யோசித்து கொண்டே இருந்தான். அப்போது, அந்த எதிரி மன்னனிடம், அவனை விட வயது முதிர்ந்த பெண் ஒருத்தி, அந்த நகரத்தை கைப்பற்ற உதவுவதாக கூறிக்கொண்டு வந்தாள். ஏற்கனவே அவனும் புரஞ்சரன் ஆளும் நகரத்தை கைப்பற்ற யோசித்து கொண்டு இருந்த படியால், அந்த பெண்ணை தன் திட்டத்தில் சேர்த்து கொள்ள முடிவு செய்தான். மேலும் அந்த பெண், அந்த எதிரி நாட்டு மன்னனிடம் தன்னை மணமுடித்து கொள்ளும் படியாக கேட்டு கொண்டாள். ஆனால் அவன், "உன்னை என்னால் மணம் செய்து கொள்ள இயலாது, ஆனால் என் தம்பியை உனக்கு கொடுக்கிறேன், கூடவே 360 வீரர்களை கொண்ட படையும் உனக்கு தருகிறேன். இவற்றை கொண்டு, புரஞ்சரன் வசிக்கும் நாட்டின் மீது படை எடுத்து எனக்கு வெற்றியை பெற்று தா" என கூறினான். இதற்கு ஒரு மனதாக, அந்த வயது முதிர்ந்த பெண்ணும் சம்மதித்தாள். தனக்கு அளிக்கப்பட்ட புது படைகளை பார்த்த அவளுக்கு, ஆச்சர்யமாக இருந்தது. காரணம், அந்த படை வீரர்கள், தன் உடம்பில் பாதி வெள்ளையாகவும், பாதி கருப்பாகவும் இருந்தனர். ஆக ஒரு வழியாக, புரஞ்சரனை வீழ்த்தும் திட்டம் தயார் ஆனது.

முதலில், 360 பேர் கொண்ட படை வீரர்கள் போருக்கு முன் நின்றனர். பின் அந்த முதியவளும், எதிரி நாட்டு மன்னனின் தம்பியும் போர்க்களத்தில் நின்றனர். இந்த போர்க்காட்சியை சற்றும் எதிர் பார்த்திராத, புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுந்த சோகம் அடைந்தனர். தனது மந்திரியின் துணையுடன், அவர்களும் போர்க்களத்தில் இறங்கினர். போர் வெகு நாட்கள் நடந்தன. முதலில் 360 போர் வீரர்கள் ஆக்கிரமிப்பு செய்ய ஆரம்பித்தனர். பின் அந்த முதியவளும் அவளது புது கணவனான, எதரி நாட்டு மன்னனின் தம்பியும், அந்த நகரத்தை அடைந்தனர். கடைசி வரையில் புரஞ்சரனின் மந்திரி மட்டும், சற்றும் தளராது போர் செய்து கொண்டு இருந்தார். இறுதியில், எதிரி நாட்டு மன்னனும் போர்க்களத்தில் நுழைந்து, புரஞ்சரனின் நகரத்தை கை பற்றினர். அந்த ஊரை விட்டு, புரஞ்சரன் மற்றும் அவனது மனைவியை துரத்தி அடித்தனர்.

தனது நகரத்தை இழந்த புரஞ்சரனும் அவனது மனைவியும் மிகுத்த கஷ்டங்களுடன் வாழ்க்கையை வாழ்ந்தனர். இவர்கள் இருவரும், இணை பிரியாமல் பல பிறவிகள், இறந்தும்-பிறந்தும்-வாழ்ந்தும் வந்தனர். புரஞ்சரன், பிறவிகள் செல்ல செல்ல தான் செய்யும் கர்மா காரணமாக, முன்பை இழிந்த பிறப்பாக எடுத்து வந்து இறுதியில் மிகவும் இழிவான பிறவியை எடுத்து, அப்போதும் தன் மனைவியை பிரியாமல் வாழ்ந்து வந்தான் (ஜென்ம ஜென்மமாய் தொடர்ந்து வந்தது, பந்தம்). இந்நிலையில் ஒரு நாள் புரஞ்சரன், தன் பூர்வ ஜென்மத்து சிநேகிதனான அவிக்ஞானனை தன் வழியில் கண்டான். அவிக்ஞானனும் தன் ஞானத்தால் நண்பன் புரஞ்சரனை அடையாளம் கண்டு விட்டான். அவிக்ஞானனை கண்ட புரஞ்சரன், "தன்னை எப்படியாவது உன்னுடனே சேர்த்துக்கொள் நண்பா" என அழுது புரண்டான்.
"நான் தான், உனக்கு அப்போதே எச்சரிக்கை விடுத்தேனே நண்பா. நீ தான் அதை கேட்கவில்லை. சரி, பரவாயில்லை" என்று கூறி, தன் நண்பன் புரஞ்சரனை, மீண்டும் பழைய நிலைக்கே தன்னுடைய சக்தியால் மாற்றி தன்னுடன் சேர்த்து கொண்டான், அவிக்ஞானன்.

இவ்வாறு இந்த கதை முடிவு பெறுகிறது. இந்த கதையை வெறுமனே கேட்டால், இதில் என்ன பெரிய கருத்து அடங்கியுள்ளது என தோன்றும். இந்த கதையை "ஸ்ரீ மத் பாகவதத்தில்" குறிப்பிட காரணம் என்ன? வெறும் இருவரின் கதையை, இறைவன் சம்பந்தபட்ட புராணம் ஏன் குறுப்பிட வேண்டும்?

இந்த கதைக்கான விளக்கத்தை நாரதரே குறிப்பிடுவதாக, வியாசர் கூறியுள்ளார். இந்த கதையில் வரும் ஒவ்வொரு பாத்திரங்களும், உண்மையில் வெறும் மனிதர்கள் அல்ல. உண்மையில் அவை மற்றொன்றின் உருவகங்கள். அவை கீழ்க்கண்டவாறு விளக்கம் அளிக்கப்படுகிறது.

புரஞ்சனன் - ஆத்மா
அவிக்ஞானன் - பரமாத்மா (பகவான்)
9 வாசல் கோட்டைகள் கொண்ட நகரம் - உடல் (9 துவாரங்களை உடையது)
நகரத்து ராணி - புத்தி
5 தலை நாகம் - பஞ்ச இந்திரியங்களை அடக்கி ஆளும் மனது
வேட்டை - "கனவு" போன்ற புத்தியின் தொடர்பு இல்லமால் செய்யும் செயல்கள்
முதிய பெண் - மூப்பு (நோய்கள்)
எதிரி நாட்டு மன்னன் - மரணம்
எதிரி நாட்டு மன்னனின் தம்பி - தைரியம் இன்மை
360 படை வீரர்கள் - 360 நாட்கள் (வருடம் அல்லது காலம்)
புரஞ்சரனின் மந்திரி - மன உறுதி

இப்போது இந்த கதா பாத்திரங்களை, நம் வாழ்க்கையுடன் ஒப்பிட்டு பாருங்கள். உண்மையில் ஆத்மாவாகிய நாம் எல்லோரும் ஒரு "புரஞ்சரன்" தான். அவிக்ஞானன் என்னும் பரமாத்மாவாகிய இறைவனிடம் நாம் எப்போதும் நண்பர்களாகவே இருந்து வந்துள்ளோம். இந்த உடல் மீதும், வெளி விஷயங்கள் மீதும் கொண்ட பற்று, நம்மை இறைவனிடம் இருந்து பிரித்து விட்டன. 9 துவாரங்களை உடைய உடல் என்னும் நகரத்தை ஆள்வதிலேயே நம் மனம் லயித்து விடுகிறது. "புத்தி", என்ற ராணியை பற்றி, உடல் என்னும் நகரத்தை கைப்பற்றுகிறோம். ராணியின், சொற்படி நாமும்(ஆத்மா), மயங்கி போய் கிடக்கிறோம். புத்தி சொல்லாத விஷயங்களை நாம் செய்ய ஆரம்பிக்கும் பொழுது, அது நம்மை எச்சரிக்கிறது. பின், எதிரிகளான நோயும், தைரியம் குறைவும், நம்மை தன் படைகளான காலத்தின் உதவியுடன் நெருங்குகிறது. 360 படை வீரர்கள் ஒவ்வொருவரும் ஒரு நாளுக்கு ஒப்பிட படுகின்றனர் (பண்டைய வேத காலங்களில் ஒரு வருடத்திற்கு 360 நாட்கள் மட்டுமே) . இந்த படை வீரர்கள், பகல்(வெள்ளை), இரவு(கருப்பு) என இரண்டு சம அளவு நிறங்களில் தன் தேகத்தை உடையவர்கள். இந்த படை வீரர்கள் ஒவ்வொருவராக நெருங்க நெருங்க, அதாவது நாட்கள் செல்ல செல்ல, அவர்கள் கூடவே, நோயும் , தைரியம் குறைவும் வருகிறது. கடைசி வரை போராடும் மன உறுதி என்னும் மந்திரியின் அழிவிற்கு பின் மரணம் என்னும் எதிரி நாட்டு ராஜா நம் உடலை வெல்கிறான். இவ்வாறு பல பிறவிகள் கடந்தாலும், இதே உயிர்-உடல் பந்தம் தொடர்கிறது. எப்போது நம்மால் எதுவுமே இயலாமல், என்னை உன்னுடன் சேர்த்துக்கொள் என்று நம் நண்பனிடம்(இறைவனிடம்) சென்று அடைக்கலம் புகுகிறோமோ, அன்று மீண்டும் கடவுளின் அனுகிரகத்தால், கடவுளிடம் இணைகிறோம். இவ்வாறு இணைந்தவன், மீண்டும் வேறு ஒரு ராணி(உடல்) இடம் மயங்குவது இல்லை. இந்த நிலையே, ஒவ்வொரு பிறப்பிற்குமான இறுதி நிலை (முக்தி நிலை).

இந்த கதைக்கு நாரதர் கொடுத்த விளக்கம் மதங்களுக்கு எல்லாம் அப்பாற்ப்பட்டவைகள் என நினைக்கிறேன். இவ்வாறான கதைகளை கேட்கும் போது, மிகவும் சாதாரணமாக நமக்கு பட்டாலும் அவற்றில் பல உள் கருத்துக்கள் சூட்சமமாக பொதிக்கபட்டுள்ளன.
21-ஸ்ரீமத்-பாகவதம்–வேளுக்குடி-ஸ்ரீகிருஷ்ணன்

இதன் முந்தைய பகுதி…

முதல் ஸ்கந்தம் – பதினான்காம் அத்தியாயம் தர்மபுத்திரன் கவலை

தர்மபுத்திரனுக்கு துவாபர யுகத்தினுடைய இறுதி வருவது புரிந்தது. தன் நாட்டில் அபசகுனங்கள் தோன்றியதைக் கவனித்தான். துவாரகையில் கண்ணன் சுகமாக இருக்கிறானா என்று தெரிந்து வரப்போன அர்ஜுனன், ஏழு மாதங்கள் ஆகியும் திரும்ப வரவில்லை. ஆகவே, தர்மபுத்திரன் வருத்தத்தோடு பீமசேனனிடத்தில் பேசினான். ‘நம் நாட்டின் நிலையைப் பார்! மக்கள் எல்லாம் கோபத்தாலும், பேராசையாலும், பொய் கூறுவதாலும், பிறருடைய பொருளுக்கு ஆசைப்படுவதாலும், வஞ்சனை எண்ணம் கொண்டிருப்பதாலும் தாழ்ந்தே போகிறார்கள். வயோதிகர்களை யாரும் காப்பாற்ற மறுக்கிறார்கள். வேதத்தில் ஈடுபாடு குறைகிறது. நரிகள் ஊளையிடுகின்றன. கொள்ளிக் கட்டைகள் விழுகின்றன. ரத்தம் பெருகுகின்றது. நம் நாட்டில் நல்ல சகுனங்கள் என் கண்ணுக்குப் படவில்லை. துவாரகைக்குப் போன அர்ஜுனனையும் காணோம். என்ன நடக்கப் போகிறதோ? என்று கவலையுறுகிறேன்!’

இப்படி தர்மபுத்திரன் பேசிக் கொண்டிருந்தபோதே, வருத்தம் தோய்ந்த மனத்தோடு அர்ஜுனன் உள்ளே நுழைந்தான். அவனைக் கண்ட தர்மபுத்திரன் வியப்புற்று, ‘அர்ஜுனா! யாரையும் கண்டு கலங்காத நீயா கலங்கியிருக்கிறாய்? உன் உடலில் ஒளி குறைந்திருக்கிறதே! எதனால்? நோய் நொடி இல்லாமல் இருக்கிறாயா? அல்லது அங்கு சென்ற இடத்தில் பந்துக்கள் உன்னை கௌரவப்படுத்தவில்லையா? அவமதித்து விட்டார்களா? அல்லது கையேந்தி நின்றவர்களுக்குக் கொடுப்பதாக பிரதிக்ஞை செய்துவிட்டு, பின்பு பொருளாசையால் அவர்களுக்குக் கொடுக்காமல் வார்த்தை தவறினாயா? குழந்தை, பசு, வயதானவர், நோயுள்ளவர், பெண்கள் இப்படி யாரேனும் உன்னிடத்தில் தஞ்சமாக அடைந்து, அவர்களைக் காப்பாற்றாமல் விட்டு விட்டாயா? ஆசைப்படக் கூடாத ஸ்திரீயினிடத்திலே விருப்பம் வைத்தாயா? அல்லது அலங்காரம் இல்லாமல் இருந்தாலும் கூட, கைவிடத் தகாதவர்களான உன்னுடைய மனைவியரிடத்திலே விருப்பம் வைக்கத் தவறினாயா?

‘பெரியோர்களோ, உனக்கு சமமானவர்களோ உன்னை ஜெயிக்காமல் விட்டு விட்டார்களா? (சான்றோர்களிடம் தோற்று அவர்களை வணங்குவதே ஒரு பாக்கியம்). ஒருவேளை, குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் உணவு கொடுக்காமல் நீ உண்டு விட்டாயா? ஏதேனும் கெட்ட காரியத்தைச் செய்தாயா? அல்லது இவை அனைத்தையும் விட சோகத்தைக் கொடுக்கக் கூடியது, கண்ணனை விட்டுப் பிரிவது! கண்ணனைப் பிரிகிறோம் என்ற வருத்தத்தால் உடல் இளைத்து விட்டாயா? இந்த குற்றங்களுக்குள் எது உன் மேனியை வாட்டுகிறது?’ என்று சூட்சுமமான தர்மங்களை உணர்த்தும் வகையில், தர்மபுத்திரர் கேட்டார்.

நடுங்கிய குரலோடு, அர்ஜுனன் பதில் கூறத் தொடங்கினான். காத்திருந்து கேட்போம்.

முதல் ஸ்கந்தம் – பதினைந்தாம் அத்தியாயம்
கண்ணன் பிரிவு தந்த கலக்கம்

உகந்த தோழன், உற்ற நண்பன், அனைவருடைய நன்மையையே விரும்புபவன் – இப்படிப்பட்ட ஒருவனைப் பிரிந்தால் யாருக்குத்தான் துன்பம் ஏற்படாது? கண்ணனைத் தவிர, உயிர்க்குயிரான இப்படிப்பட்டவன் எவன் இருக்க முடியும்? கண்ணன் இப்பூவுலகத்தைப் பிரிந்து, வைகுண்டத்தை அடைந்தான் என்ற செய்தியை மனத்தில் தாங்க முடியாது திணறிக் கொண்டு, அர்ஜுனன் தன் நாட்டை அடைகிறான். உள்ளமும், உடலும் தளர்ந்து போய் தழுதழுத்த குரலோடு தன் அண்ணனிடத்தே பேசுகிறான்: “தர்மபுத்திரரே! நாம் அனைவரும் கண்ணனால் ஏமாற்றப்பட்டோம். கண்ணன் இவ்வுலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு, வைகுண்டத்துக்கு ஏகினான். யாருடைய பிரிவை மனிதர்களால், அதுவும் பக்தர்களால் ஒரு வினாடி கூட சகித்துக் கொள்ள முடியாதோ, அப்படிப்பட்ட அவன் நம் அனைவரையும் தவிக்க விட்டுப் பிரிந்தான். பஞ்சபாண்டவர்களாகிய நம்மிடத்தில் கண்ணன் எவ்வளவு பிரியத்தோடு இருந்தான்! இயந்திரத்தில் வைக்கப்பட்ட மீனின் மேல் அம்பைக் குறி தவறாது எய்து, ஸ்வயம்வரத்தில் நான் திரௌபதியை ஜெயித்ததே அவன் அருளால்தான்!

“திரௌபதி மானபங்கப்படுத்தப்படும் நிலைக்கு உட்படுத்தப்பட்டபோது, எங்கோ அவன் இருந்தாலும், ஆபத்திலே புடவை சுரந்து, காத்துக் கொடுத்தான். நாம் காட்டில் இருக்கும்போது, துரியோதனனால் தூண்டப்பட்ட துர்வாஸர் நம்மை சபிக்க நேரிடும் நிலை வந்தபோது, ஒரு பாத்திரத்தில் இருந்த சிறு கீரைத் துண்டை எடுத்து உண்டு, அனைவருடைய பசியையும் போக்கி, துர்வாஸருடைய கோபத்தையே விரட்டினான். எனக்கு பாசுபதாஸ்திரம் தேவைப்பட்டபோது, உடனே பெற்றுக் கொடுத்தான். எளியவனான என்னால் பீஷ்மர், துரோணர் முதலானோர்களை வீழ்த்தியிருக்கவே முடியாது. கண்ணனே தேரோட்டியாக இருந்து, முன்னும் பின்னுமாகத் தேரைச் செலுத்தி, நான் சிரமப்பட்டுச் சண்டை செய்ய வேண்டிய தேவையே இல்லாமல், அவனே யுத்தத்தில் நமக்கு ஜெயித்துக் கொடுத்தான். இறுதியாய், அச்வத்தாமாவினுடைய அஸ்திரத்தால் நம் குலமே அழிந்துவிடும் என்ற தவிப்பில் நாம் இருந்தபோது, அந்த ஆபத்தை நீக்கிக் காத்துக் கொடுத்தான். இப்படி கண்ணன் நமக்காக எத்தனை நன்மைகளைச் செய்திருக்கிறான்!

“என் புருவ நெறிப்பின் குறிப்புணர்ந்து, அதற்குத் தக்கவாறு தேரை நடத்துவான். நம்முடைய குழந்தையான பரீக்ஷித் சாகாமல் கண்ணன் காத்தான். அவன் கரிக்கட்டையாக விழுந்தபோதும், உயிர் பிச்சை அளித்தான். திரௌபதியினுடைய மங்கள ஸூத்திரத்திற்கு பங்கம் வராமல் காத்துக் கொடுத்தான். இவை மட்டுமா? நாம் எத்தனை அபசாரங்களை அவனிடத்தில் புரிந்தோம்! அவை அனைத்தையும் தன்னுடைய கண் சிமிட்டல், புன்சிரிப்பு, உதட்டை நெகிழ்த்துதல், அணைத்துக் கொள்ளுதல் போன்ற சிறு சிறு செயல்களாலேயே மன்னித்துத் தன் அருள் நோக்கையே பரிசாகத் தந்தான்.

நர்மாண்யுதார ருசிரஸ்மித சோபிதாநி
ஹே பார்த்த! ஹே அர்ஜுன! ஸகே!
குரு நந்தன! இதி
ஸஞ்ஜல்பிதாநி நரதேவ ஹ்ருதிஸ்வ்ருசானி
ஸ்மதுர் லுடந்தி ஹ்ருதயம் மம மாதவஸ்ய

மாதவனாகிய கண்ணனின் ஒவ்வொரு விளையாட்டுச் செய்கையையும் நினைத்து என் உள்ளம் இப்போதும் உருகுகிறது. அவன் நம்மை கூப்பிட்டபோது, ‘பார்த்தனே! அர்ஜுனா! அத்தை பிள்ளையே! நண்பனே! குரு குலத்தில் உதித்தவனே!’ என்று பாசத்தோடு அழைத்திருக்கிறான். அவன் பரமேச்வரன்! மனித உடலை எடுத்துக் கொண்டு மண்ணுலகில் அவதரித்திருக்கிறான் என்பதைக் கூடச் சரிவர புரிந்து கொள்ளாத நான், ‘நண்பனே! இடையனே! அடேய்!’ என்று எத்தனை முறை கூப்பிட்டிருக்கிறேன்? இப்பிழைகளெல்லாம் எனது அறியாமையால் செய்யப்பட்டவை! கண்ணனும் அவற்றைப் புன்னகையுடன் பொறுத்து வந்தான்” என்றான் அர்ஜுனன்.

ஆண்டாள் தன் திருப்பாவையில்,

‘அறியாத பிள்ளைகளோம் அன்பினால்
உன்தன்னைச் சிறு பேரழைத்தனவும்
சீறியருளாதே, இறைவா! நீதாராய் பறை!’

– என்று வேண்டுகிறாள். ‘நாங்கள் எல்லாரும் இடைப் பெண்கள். நீ, எம்மிடையே பிறந்தாய்! உன்னையே எம் மணாளன் என்று கொண்டு, எங்கள் அறியாத்தனத்தாலும், அன்பினாலும், சிறுபிள்ளைத்தனத்தினாலும் எவ்வளவோ கேலிச் சொற்களைக் கொண்டு உன்னைக் கூப்பிட்டிருப்போம்! அவை அனைத்தையும் நீ குற்றமாகக் கொள்ளாமல் மன்னித்தருள வேண்டும்’ என்று வேண்டுகிறாள். அதே நிலைதான் அர்ஜுனனுக்கு!

அஜானதா மஹிமாநந் தவேதம்
மயா ப்ரமாதாத் ப்ரணயேன வாபி

– என்று, கீதை 11-ஆவது அத்தியாயத்தில், கண்ணனிடத்தில் அர்ஜுனன் மன்னிப்பு வேண்டினான். நாம் ஒவ்வொருவரும் பகவானிடத்தில் எத்தனையோ விதமான குற்றங்களைப் புரிகிறோம். அவன், நம்மை, தன் குழந்தைகளாக நினைத்துக் கொண்டு அனைத்தையும் மறக்கக் காத்திருக்கிறான். நாம் செய்ய வேண்டியது என்ன? இப்படித் தவறு இழைத்து விட்டோமே என்று வருந்தி, அதை அவனிடத்தில் விண்ணப்பித்து மன்னிப்பு வேண்டி நிற்க வேண்டும். மறுபடியும் இந்தக் குற்றம் நிகழாது என்று உறுதி கூற வேண்டும். அதற்குரிய பிராயச்சித்தம் செய்ய வேண்டும். கண்ணன் பஞ்ச பாண்டவர்களோடு உறங்கியபோதும், ஆடியபோதும், உண்டபோதும் எத்தனை வேடிக்கை பேச்சுக்கள் பேசியிருப்பான்!

அர்ஜுனன் தொடர்கிறான் :“ஒரு தந்தை எப்படித் தன் குழந்தையின் பிழையைப் பொறுத்துக் கொள்வானோ; ஒரு பிரியமான காதலி, காதலனுடைய குற்றத்தையெல்லாம் எப்படிப் பொறுப்பாளோ; ஒரு சிஷ்யனின் தவறுகளை ஆசான் எப்படி பொறுப்பாரோ; அதைப்போல கண்ணன் நம் அனைவருடைய குற்றங்களையும் பொறுத்தான். அந்தோ! இப்போது அப்படிப்பட்டவனை இழந்து தவிக்கிறோம். அண்ணா! என்னுடைய காண்டீபம் கையை விட்டுக் கழல்கிறது. ஏற்கெனவே ஒருமுறை மஹாபாரத யுத்தத்தின் முதல் நாள் என்னால் காண்டீபத்தைப் பற்ற முடியாமல் தளர்ந்தேன். அப்போது 700 ஸ்லோகங்களால், கீதையை உபதேசித்து, மறுபடியும் வீரத்தோடும், பலத்தோடும் காண்டீபத்தைத் தூக்க வைத்தான் கண்ணன். ஆனால், இப்போது அந்தக் கண்ணனைப் பிரிந்தோம். இனி இந்தக் காண்டீபத்துக்கு சக்தி கிடையாது. என் உள்ளமும், உயிரும் இப்போது நடுங்குகின்றன” என்று அர்ஜுனன் பரிதவித்தான்.

அப்போது தர்மபுத்திரன் இவை எல்லாவற்றையும் கேட்டுத் துன்பப்பட்டு, “அர்ஜுனா! யாதவர்களுக்கு என்ன நடந்தது? கண்ணன் எங்கு சென்றான்?” என்று வினவினான். உடனே அர்ஜுனன் கூறினான்: “முனிவர்களுடைய சாபத்தையே ஒரு காரணமாகக் கொண்டு யது குலமே அழிந்து போயிற்று. கண்ணனும் அக்குலத்தில் ஒருவனானபடியால், ‘வந்த காரியம் முடிந்தது –பூமியின் பாரத்தைத் தீர்த்தோம்; அசுரர்களையும், தீயவர்களையும் ஒழித்தோம்; நல்லோரைக் காத்தோம்; திரும்பப் போகலாம்’ என்ற மனநிறைவுடன் பூமியை நீத்து, வைகுண்டத்தை அடைந்து விட்டான்! என் செய்வோம் இனி?” என்று புலம்பினான்.

சிறிது பொழுது இப்படிக் கலங்கிய அர்ஜுனன், மறுபடியும் கண்ணன் உபதேசித்த கீதையை ஞாபகப்படுத்திக் கொண்டு, இழந்த தைரியத்தை மீட்டுக் கொண்டான். ஞானமும், பக்தியும் ததும்ப, ‘கண்ணன்’ சொன்னபடி நடக்க வேண்டுமானால், ‘இவ்வுலகத்தைக் கண்டு இப்படிக் கலங்குவது கூடாது. அழியாத இன்பமான அவனது திருவடிகளின் நினைவு நம்மோடு எப்போதும் இருக்கும்போது, நாம் ஏன் கலங்க வேண்டும்?’ என்று மனத்தைத் தேற்றிக் கொண்டான். இனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று பாண்டவர்கள் யோசிக்கலுற்றார்கள்.

‘ஒரு கைதேர்ந்த நாடக நடிகன் தன் வேஷத்தைக் கலைத்து விட்டபின், இயல்பானபடி இருப்பான். அவ்வாறே கண்ணனும், தான் எடுத்துக் கொண்ட வேஷத்தைக் கலைத்துவிட்டு வைகுண்டத்தை அடைந்து விட்டான். வேஷம் என்று சொல்வதனாலே கண்ணனுடைய அவதாரம் பொய் என்று பொருள் அல்ல. ஒரு நடிகன் நாடகத்தில் நடித்தால், மனோபலத்துடன் கூடிய அவனது நடிப்பு பொய்யாகுமா? கண் முன்னுள்ள அவன்தான் பொய்யா? உணர்ச்சி ததும்பும் கதைதான் பொய்யா? அனைத்தும் உண்மைதான். ஆனால் நாடகம் முடிந்தால், வேஷம் கலையும். அதேபோலத்தான், கண்ணனுடைய செயலும்! நம்முடைய நாடகமும் முடிந்தது. இனி, அவனையே நாம் அடைய வேண்டும்’ என்று தர்மபுத்திரன் முடிவு எடுத்து, ‘இந்த லோகத்தை விட்டு வானவர் உலகை அடைவோம்’ என்று உறுதிபூண்டு, தம்பிகளை அழைத்துக் கொண்டு வனம் ஏகினான். நாட்டைக் காக்க வேண்டுமே! அதற்காகத் தன் பேரனான பரீக்ஷித்துக்குப் பட்டம் கட்டினான். மதுரைப் பட்டணத்தில் சூரசேனனின் மகனான வஜ்ரனுக்குப் பட்டம் கட்டி விட்டு, தம்பிமார்களோடு கந்தமாதன பர்வதத்தில் இருக்கும் பதரிகாச்ரமத்தை நோக்கி நடந்தான்.

இன்றும் நாம் பதரியை அடைந்தால், அவ்விடத்திற்கு மேலே இருக்கும் ‘மானா’ என்ற இடத்திலிருந்து ‘ஸத்பத்’ என்றழைக்கப்படும் கடினமானதோர் மார்க்கம் இருக்கிறது. அந்த மார்க்கத்தில் நடந்து போய்த்தான் திரௌபதியும், பஞ்ச பாண்டவர்களும் வடக்குத் திசையில் சென்றார்கள். மக்கள் அனைவரும் ‘திரும்ப வாருங்கள், வாருங்கள்’ என்று கூப்பிடக் கூப்பிட, யார் பேச்சையும் காதில் போட்டுக் கொள்ளாமல், மனத்தை முழுவதுமாகக் கண்ணனிடத்தில் நிலை நிறுத்தி, தர்மபுத்திரனும், அவன் தம்பிமார்களும் உயர்ந்த ஹிமாசலத்தில் நடந்து, உடலைத் துறந்து, நற்கதி அடைந்தார்கள்.

இவை அனைத்தையும் கேள்விப்பட்ட விதுரர், கண்ணனையே உள்ளத்தில் நினைத்துக் கொண்டு பிரபாஸ க்ஷேத்திரத்தில் உடலை விட்டு, உயர்கதியை அடைந்தார். இப்படியாய் கண்ணன் புறப்பட்டுப் போனது, பஞ்ச பாண்டவர்களும் சென்றது, விதுரர் பிரிந்தது – ஆகியவற்றைக் கூறும் இந்த அத்தியாயத்தை எவர்கள் படிக்கிறார்களோ, கேட்கிறார்களோ, அவர்களுடைய பாவங்கள் விலகி, பரம பவித்திரர்களாய், ஹரி பக்தி பெருகியவர்களாய் வளர்ந்து, அவனுடைய திருவடிகளையே அடைவார்கள் என்பது திண்ணம்.