Thursday, October 30, 2014












பூலோகம் வந்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் (ஆன்மீகக் கதை )

 ஒரு நாள் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பூலோகம் வந்து மானிடர்களை பார்த்து விட்டு செல்லலாம் என எண்ணி நகர்வீதி உலா வந்தாராம், சாதாரண மனிதர் உருவில் வந்த ஸ்ரீ கிருஷ்ணரை அடையாளம் கண்டு கொண்ட பக்தர் ஒருவர் அப்பனே ! "பூலோகத்தில் வந்த உங்களை சந்தித்ததில் எனக்கு பெரும் மகிழ்ச்சி "! என்றார் . அதற்கு பரவாயில்லை சாதாரண மனித உருவில் வந்தாலும் கண்டு கொண்டாய், சரி நான் பூலோகத்தில் சில மனிதர்களை சந்திக்க வேண்டி உள்ளது . என்னுடன் வாருங்கள் என அழைத்துச் சென்றார் .

பக்கதரும் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் அழைப்புக்காக உடன் சென்றார் . சிறிது தூரம் சென்றதும் " பக்தா, எனக்கு தண்ணீர் தாகமாக உள்ளது. இந்த செல்வந்தர் வீட்டில் தண்ணீர் வாங்கி வா என கட்டளையிட்டார் . பக்தரும் மறுப்பேதும் சொல்லாமல் அந்த செல்வந்தர் வீட்டு கதவை தட்டினார் .

 வெளியே வந்த செல்வந்தரிடம் பக்தன் "பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் வந்திருக்கிறார் உங்கள் வீட்டில் ஒரு சொம்பில் தண்ணீர் வாங்கி வரச்சொன்னார் எனச்சொல்ல அந்த செல்வந்தரோ " யாராக இருந்தாலும் தண்ணீர் தர முடியாது. அப்படி கொடுத்தால் எங்கள் வீட்டில் செல்வம் தங்காது . தண்ணீர் இல்லை என்று சொல்லி விடு என திருப்பி அனுப்பினார் .

 பக்தன் ஏமாற்றத்தோடு திரும்பி வந்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணரிடம் தண்ணீர் தர முடியாது என அலட்சியமாக சொல்லி விட்டார் எனச் சொல்ல பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சிரித்தாவாறு " இந்த செல்வந்தனுக்கு மேலும் பொன்னும் பொருளும் வந்து சேரட்டும் எனச் சொல்லி விட்டு, ஸ்ரீ கிருஷ்ணர் மேலும் நடக்க ஆரம்பித்தார் . பக்தரும் குழம்பியவாறு அவர் பின்னே நடக்கலானார் .

அடுத்து அவர்கள் சென்றது ஓர் தனிக்குடிசை வீடு . அங்கு வறுமைகுடி கொண்டிருந்தது. அங்கு குழந்தைகள்,கணவர் ,தாய், தந்தையர் இல்லாமல் அனாதையாக ஒர் வயதான பெண்மணி மட்டும் வசித்து வந்தார் .ஒரே வயதான மாடு வளர்த்து பால் விற்று அந்த பணத்தில் தம் சுய தேவைகளை பூர்த்தி செய்து வந்தார். ஆனால் ஸ்ரீகிருஷ்ணர் மேல் அளவு கடந்த பக்தி கொண்டவர்.

அந்த பெண்மணி வீட்டின் முன்பு நின்ற பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் "இந்த வயதான பெண்மணி வீட்டில் தண்ணீர் வாங்கி வா என பக்தரிடம் சொல்ல " சரி என்றவாறு வயதான பெண்மணியிடம் சென்ற பக்தர் பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் உங்கள் வீட்டின் முன்பு வந்து நிற்கின்றார் . தண்ணீர் தாகமாக உள்ளதாம் , தண்ணீர் கொடுங்கள் என்றதும் . அந்த வயதான பெண்மணி "நான் அனு தினமும் தொழும் எம்பெருமான் ஸ்ரீ கிருஷ்ணரே வந்து இருக்கிறாரா ? என மிக்க மகிழ்ச்சியுடன் ஒர் பாத்திரத்தை சுத்தம் செய்து அதில் சுத்தமான நீர் கொண்டு சென்று ஸ்ரீ கிருஷ்ணரிடம் கொடுத்து வணங்கி நின்றார் . தண்ணீர் பருகியவுடன் ஸ்ரீ கிருஷ்ணரை பார்த்த பிரமிப்பில் நிற்க பகவான் சிரித்தவாறு போய் வருகிறேன் எனச் சொல்லி விட்டு நடக்க ஆரம்பித்தார் .

கொஞ்சம் தூரம் நடந்து சென்றதும் அந்த வயதான பெண்மணி வைத்திருந்த மாட்டை பார்த்து ஸ்ரீ கிருஷ்ணர் " இந்த பசுமாடு இறந்து போகட்டும் " எனச்சொல்லிவிட்டு நடக்க ஆரம்பித்தார் . ஸ்ரீ கிருஷ்ணருடன் வந்த பக்தனுக்கோ குழம்பிய வாறு கிருஷ்ணரிடம் ஓர் கேள்வி கேட்டான் " பகவானே நான் குழப்பமாக உள்ளேன் .

 முதலில் ஓர் செல்வந்தர் வீட்டிற்கு சென்றோம் . அவர் தண்ணீர் இல்லை என்றார் . அவருக்கு மேலும் செல்வம் சேரட்டும் என்றீர்கள் , இரண்டாவதாக ஒர் வயதான பெண்மணி தண்ணீர் தந்து தாகம் தீர்க்க உதவினார் . அவருக்கு மாடு செத்துப்போகட்டும் என்கிறீர்கள் . கஷ்டப்படுகிறவர்களுக்கு சாபமும் , செல்வச் செழிப்போடு இருப்பவனுக்கு வரமும் தந்துள்ளீர்களே ? இதுதான் இறைவன் தீர்ப்பா? என கேட்க

 பகவான் கிருஷ்ணர் சொன்னார்

 (இனி உள்ள வரிகள் முக்கிய மானவை கவனமாக படியுங்கள் )

 " பக்தா உனக்கு புரியம்படி சொல்கிறேன் கேள் என்றவாறு " எவன் ஒருவன் அளவுக்கதிகமாக பொன்னையும் பொருளையும் தேடி அலைகிறானோ அவன் நிம்மதியை இழக்கிறான் . அதனால்தான் அவனுக்கு மேலும் பொன்னும் பொருளும் சேரட்டும் என சாபமிட்டேன் . அதை நீ வரமென நினைத்துக்கொண்டாய் !

 இரண்டாவதாக அனாதையாக இருந்த வயதான பெண்மணி என்னுடைய தீவிர பக்தை . அவளுக்கு இந்த பூலோகத்தில் இருக்கும் ஒரே பிடிப்பு இந்த வயதான பசு மாடுதான் . அதுவும் இறந்து விட்டாள் . இந்த பெண்மணியும் இறந்துவிடுவாள் . அவளுக்கு மேலோகத்தில் என்னை அனு தினமும் வழிபாடு செய்ததற்காவும் ,நல்ல உள்ளத்திற்காகவும் சொர்க்கத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன் . அவளை மேலோகத்தில் சந்தோஷமாய் காத்துக்கொள்வேன் என்றவாறு கூறி நான் வந்த வேளை முடிந்தது. சென்று வருகிறேன் எனச்சொல்லி அந்த பக்தனை ஆசிர்வதித்து மாயமாய் மறைந்து போனார் .

 பக்தனும் பல வாழ்வியல் சூட்சமங்களை அறிந்தவனாக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் சென்ற திசையை நோக்கி கை கூப்பி தொழுதார் .
மனிதன் விஷயங்களைக் கருதும்போது அவற்றில் பற்றுதலுண்டாகிறது, பற்றுதலால் விருப்பமுண்டாகிறது, விருப்பத்தால் கோபம் உண்டாகிறது.

கோபத்தால் மயக்கம், மயக்கத்தால் நினைவு தவறுதல், நினைவு தவறுதலால் புத்தி நாசம், புத்தி நாசத்தால் அழிகிறான்.

இதற்கு காரணம் மனிதன் தான் ஆத்மா என்பதை மறந்து தன் உடல்த் தான் நான் என்றும் தன் உடலை கொண்டு அனைத்தையும் செய்கிறான். அவன் நினைப்பது, பார்ப்பது, கேட்பது எல்லாம் தனக்கு கிடைக்கவேண்டும் என்று என்னுகிறான்.

அவன் எதிர்ப் பார்ப்பது சில சமயம் கிடைக்கும் சில சமயம் கிடைக்காது. இதனால் தன் உடலுக்கு எற்படும் பலன் (இன்பம் துன்பம், இலபம் நஷ்டம்) அனைத்தையும் தானக்கு வந்ததாக நினைக்கிறான். இதனால் அவன் புத்தி நாசம் அடைந்து கோபம் உண்டாகிறது.

இப்படி வாழும் மனிதர்களுக்கு கிடைக்கும் சுகம் உண்மையும் இல்லை நிரந்தரமும் இல்லை. 

ஒவ்வேறு மனிதனும் உலக போகங்களில் பற்றும் ஆசையும் இல்லாமால் தன் புலன்களை அடக்கி தான் ஆத்மா என்று உணர்ந்து ஆத்மாவாக இருந்தல் தான் தனக்கு எது வந்தாலும் அதை சமாக எற்றுக் கொண்டு உண்மையன சந்தோஷத்தை அடைவான்..
ஸ்ரீமத் பாகவதம் – வேளுக்குடி கிருஷ்ணன் - 12

முதல் ஸ்கந்தம் – மூன்றாம் அத்தியாயம் 

திருமாலின் அவதாரங்கள்

 பரித்ராணாய ஸாதூனாம்
விநாசாய ச துஷ்க்ருதாம்
தர்ம ஸம்ஸ்தாபநார்த்தாய
ஸம்பவாமி யுகே யுகே!

 பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில், நான்காவது அத்தியாயத்தில் தன் அவதாரத்தின் ரகசியத்தை வெளியிடுகிறார். பெருமான் பூவுலகத்தில் பிறப்பது ஸாதுக்களை ரக்ஷிக்கவும், தீயவர்களை அழிக்கவும், தர்மத்தை நிலை நிறுத்தவும் ஆகிய முக்கியமான மூன்று பயன்களுக்காக! ஒவ்வொரு யுகத்திலும் எத்தனையோ அவதாரங்களை பகவான் செய்கிறார். பெருமான் அவதாரம் செய்ய வேண்டிய தேவை என்ன?

 பிரளயத்தின் போது, ஜீவர்கள் அனைவரும் பரமாத்மாவோடு ஒன்றிக் கிடக்கிறார்கள். மேற்கொண்டு அவர்களைப் படைக்காவிடில், கர்ம யோகத்தையோ, ஞான யோகத்தையோ, பக்தி யோகத்தையோ அல்லது சரணாகதியையோ அனுஷ்டித்து ஜீவர்களால் பெருமானை அடைய முடியாமல் போகும். உடல் இருந்தால்தான், அறிவு இருந்தால்தான், பக்தியோ, சரணாகதியோ செய்ய முடியும். நம்மீது கருணை கொண்ட எம்பெருமான் பிரளயத்தை முடிவுக்குக் கொண்டு வந்து, படைக்கத் தொடங்குகிறான். நம் அனைவருக்கும், அவரவர்களின் கர்மத்திற்குத் தகுந்தாற் போல் பிறவி கொடுக்கிறான். நாம் உடலையும், புலன்களையும், மனத்தையும் பகவானிடத்திலிருந்து பெறுகிறோம். வெறும் கருவிகளாக உடல் இருந்தால் போதுமா? உயர்ந்த அறிவை வளர்த்துக் கொள்வதற்கு, வழிகாட்டிகளான சாஸ்திரங்கள் தேவை. ஆகவே பகவான், முதலில் உடலையும், கூடவே ஞானத்தையும் கொடுத்து, விளக்கு போன்ற வேதங்களையும் அருளினான். நாம் வேதங்களைப் படித்து, அதன் வழி நடந்து, பக்தி யோகத்தைச் செய்து பெருமானை அடைவோம் என்பது பெருமானின் எதிர்பார்ப்பு!

ஆனால், நாமோ, மனம் போன வழிக்கு உடலைச் செலுத்தி, தீய வழிகளில் நடந்தோம். மேலும் மேலும் பாவங்களைச் சேர்த்தோம். நடுநடுவே ஏதோ சில புண்ணியங்களையும் அவ்வப்போது செய்தோம். இதன் பயனாக, மாறி மாறி இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து, வெவ்வேறு பிறவிகளில் உழன்று கொண்டு வந்தோம். ஸம்ஸாரம் என்னும் பெருங்கடலிலே நாம் விழுந்திருக்கிறோம். ‘இதிலிருந்து இவனை வெளியிலே கொண்டு வருவது எப்படி?’ என்று யோசித்த எம்பெருமான், ‘நாம் வைகுண்டத்திலே இருந்து கொண்டு, இவர்களை எப்படி தூக்குவது?’ ஒருவன் ஆழமான கிணற்றுக்குள் விழுந்து விட்டால், தீயணைப்புப் படையினர், முதலில், மேலிருந்து தூக்கப் பார்ப்பார்கள். அது முடியாமல் போனால், உள்ளே குதிக்க வேண்டும் அல்லது பக்கத்தில் ஆழமான கிணறு தோண்டி, கீழே சென்று, விழுந்தவனைக் காப்பாற்ற வேண்டும். பகவான், எங்கோ வைகுண்டத்தில் இருந்து கொண்டு, அதல பாதாளத்தில் விழுந்திருக்கும் நம்மைத் தூக்க இயலாது. அதற்காக, தாமே இப்பூவுலகத்தில் பிறப்போம் என்று முடிவு செய்கிறான். அதனால்தான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.

 ‘அவதாரம்’ என்றால், இறங்குதல் என்று பொருள். வைகுண்டத்திலிருந்து பகவான் நம்மைக் கடைத்தேற்றுவதற்காக இறங்குகிறான். இங்கே ஒரு ஐயம் எழலாம். ஏன் பகவான்தான் இறங்கி வந்து நம்மைக் காக்க வேண்டுமா? அவனுடைய சுதர்சன சக்கரத்தையோ, கருடனையோ, ஆதிசேஷனையோ அனுப்பி வைத்து, நம்மை காக்கச் சொன்னால், அவர்கள் கடமை ஆற்ற மாட்டார்களா? கண்டிப்பாகச் செய்வார்கள். ஆனால், கருணையே வடிவான பெருமான், அப்படிச் செய்ய மாட்டான். ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்:

ஒரு அரசன் தன் சிறு குழந்தையை கைகளில் வைத்துக் கொண்டு, கப்பலிலே சென்று, வேடிக்கை காட்டிக் கொண்டு வந்தான். சட்டென்று கப்பல் அசைந்தது. குழந்தை கை தவறி கடலில் விழுந்தது. அரசன் பதறிப் போய் உடனே கடலில் குதித்து, நீந்தி, குழந்தையைக் காப்பாற்றினான். அரசனுக்கு அருகில் சேனாதிபதியும், மந்திரியும், வீரர்கள் பலரும் இருந்தார்கள். அவர்களை ஏவி, அரசன் குழந்தையைக் காப்பாற்றச் சொல்லி இருக்கலாமே! ஏன், தானே குதிக்க வேண்டும்? ஒரே பதில்தான்! அரசன் மற்றவர்களை ஏவி இருந்தால், அவன் அரசனாக இருந்திருப்பான். தகப்பனாக இருந்திருக்க மாட்டான். தானே குதிக்கவேதான், தந்தைக்குரிய பாசத்தோடே நடந்து கொண்டான்.

இந்தத் தந்தைக்கும், சிறு குழந்தைக்கும் இரண்டு ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். வயதான நமக்கும், நம் தந்தைக்கும் நாற்பது அல்லது ஐம்பது ஆண்டுகள் தொடர்பு இருக்கலாம். ஆனால், ஒவ்வொரு ஜீவாத்மாவுக்கும், பகவானுக்கும் இன்று, நேற்றா தொடர்பு? நித்தியமான முடிவில்லாததான தொடர்பு. அவ்வளவு தூரம் நம்மோடு தொடர்புடைய, பாசமுடைய பெருமான் யாரையாவது அனுப்பியா நம்மை காப்பாற்றச் சொல்வார்? தானே குதித்தால்தானே தந்தை, தாய்க்குரிய பாசம் அவனிடத்தில் தங்கும்! பாசமுடைய ஒரு தாயைப் போல, நம்மைக் காப்பதற்காக எம்பெருமான் பூலோகத்தில் இறங்குகிறார். அவருடைய அவதாரங்கள் பொய் கிடையாது. கானல் நீரைப் போலப் பொய்யானவை அல்ல; நிஜமானவை. பெருமானுடைய அவதாரங்கள் எண்ணிறந்தவை. அவதரிக்கிறான் என்று சொல்லுகிறபடியால், கண்டிப்பாக பிறப்பு உள்ளது என்று தெரிகிறது. ஆனால், சாத்திரங்களோ, 

அஜாயமான: பஹுதா விஜாயதே

 – என்று கூறுகின்றன. பிறப்பே இல்லாத பெருமான் பல வகையான பிறப்புக்களை ஏறிட்டுக் கொள்கிறான். ஆழ்வார் அப்படியே தமிழ்ப் படுத்தி,
பிறப்பில் பல்பிறவிப் பெருமான்

 – என்று சாதித்தார். ‘பிறப்பில்’ என்பதால், பிறப்பில்லாதவன் என்று விளங்குகின்றது. ‘பல்பிறவிப் பெருமான்’ என்றதால் பல பிறவிகள் எடுத்துக் கொள்கிறான் என்று விளங்குகின்றது. பிறவியற்றவனுக்கு பிறப்பு உண்டு என்று சொன்னால் முரண்படாதா? இதில் எந்த முரண்பாடும் இல்லை. அவன் பிறக்கிறான் என்பது உண்மை. பிறக்கவில்லை என்பதும் உண்மை. இதில் குழப்பமே இல்லை. அவன் பிறப்பதில்லை; அதாவது நம்மைப் போல் பிறப்பதில்லை. நாம் அனைவரும் கர்மத்தாலே தூண்டப்பட்டு, கர்மங்களைக் கழித்துக் கொள்வதற்காகப் பிறக்கிறோம். ஆனால், பகவானுடைய பிறவிக்குக் கர்மங்கள் காரணமாகாது. பெருமானுடைய விருப்பம், இச்சை - நம்மைக் காக்க வேண்டும் என்கிற துடிப்பு. அதுவே அவர் பிறவிக்குக் காரணமாகிறது. ஆக, கர்மங்களால் பிறக்கவில்லை என்பதால், ‘பிறப்பிலி’ என்று கொண்டாடப்படுகிறான். நம் போன்றோரைக் காக்க வேண்டும் என்ற விருப்பத்தால் பிறக்கிறான் என்பதால், ‘பிறக்கிறான்’ என்று போற்றப்படுகிறான். இப்படி இரண்டுமே உடைய பெருமான் எத்தனையோ அவதாரங்களைச் செய்கிறான்.